Friday, January 21, 2005

சிறுவயது சிந்தனைகள் - 6

வடக்குக் குளக்கரைத் தெருவில் அமைந்த ஒரு பழைய வீட்டில் நாங்கள் வாழ்ந்த காலத்தில், பள்ளியில் உடன் படித்த பல நண்பர்களின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன (அல்லது) அத்தெருவின் வீடுகளில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் நண்பர்களாக இருந்தோம் என்றும் கொள்ளலாம்! அதென்னவோ, எங்கள் தெருவில் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகளை விட அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பெண்பிள்ளைகள் என்றால், 5 அல்லது 6 பேர் (என் தமக்கையும் சேர்த்து) தான் இருந்தனர். ஆனால் ஆண்பிள்ளைகளோ ஏராளம்! கிட்டத்தட்ட 40 தடியர்கள் இருந்தோம்! பள்ளி முடிந்து நாங்கள் அனைவரும் வீடு திரும்பிய பின் ஒரு முக்கால் மணி நேரம் தெருவே இரைச்சலாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பின்னர், நாங்கள் கடற்கரைக்கு, கிரிக்கெட் அல்லது கபடி விளையாடச் சென்று விடுவது வழக்கம்.

எங்கள் குழுவிலிருந்த ஒருவருக்கும் பொதுவாக, பெண்பிள்ளைகளை கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் கிடையாது. பள்ளி, பள்ளி விட்டால் நிறைய அரட்டை/விளையாட்டு, கொஞ்சம் படிப்பும், என்று வாழ்ந்த காலமது! எங்கள் வீட்டின் இரு மருங்கிலும் கடைகள் இருந்தன. ஒன்று 'நாயுடு மளிகை' என்று அழைக்கப்பட்ட விஜயா ஸ்டோர்ஸ்; மற்றது, மணியை ஓனராகக் கொண்ட, 'மணி கடை' என்ற பொட்டிக்கடை. மணிகடையில் எங்களுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும். பர்ஃபி, கடலை உருண்டை, புளிப்பு மிட்டாய், தேங்காய் பிஸ்கெட், பன்னீர் சோடா வகையறாக்களும், எங்கள் விளையாட்டு சீஸனுக்கு ஏற்றாற்போல், கோலி, பம்பரம், ரப்பர் பந்து, கில்லி தாண்டு போன்றவைகளும்! மணி சற்று குள்ளமான குண்டான உருவம் உடையவர். அவரது கடை சற்று உயரத்தில் அமைந்திருந்ததால், கடையில் ஏறி அமர்வதற்கு ஒரு சிறு ஏணி வைத்திருந்தார். மணி கடையில் ஏறிய பிறகு, அவரை அவ்வப்பொழுது நாங்கள் கிண்டல் செய்வது வாடிக்கையாக நடக்கும் ஒரு விஷயம்! கடையிலிருந்து வேகமாக இறங்கி வந்து எங்களை பிடிப்பது அவரால் இயலாத காரியம் என்பதால்!

அவர் கடையில் ஒரு வகை லாட்டரி பிரசித்தம். ஒரு அட்டையில், மடிக்கப்பட்ட சிறு கலர் காகித சீட்டுகள் பல வரிசைகளில் ஒட்டப்பட்டிருக்கும். பரிசுக்குரிய சீட்டில் ஒரு எண் அச்சிடப்பட்டிருக்கும். 5 பைசாவுக்கு ஒரு சீட்டை கிழித்துப் பிரிக்கலாம். உள்ளிருக்கும் எண், ஒரு சிறிய பரிசுப்பொருளையோ, சாப்பிடும் பதார்த்தத்தையோ குறிக்கும். எண் அச்சிடப்படாத (வெற்று) சீட்டை கிழித்துப் பிரிக்க நேர்ந்தால், கொடுத்த காசு அம்பேல்! பெரும்பாலும் இப்படியே நிகழ்ந்தாலும், நாங்கள் நம்பிக்கை இழக்காமல்(!) நிறைய காசு விட்டிருக்கிறோம்! சூதாட்ட ஆர்வத்தின் ஆரம்ப விதைகள் அப்போதே விதைக்கப்பட்டு பின்னாளில் மூணு சீட்டும், ரம்மியும் விடிய விடிய விளையாடியிருக்கிறோம்!!! சான்றோர் களவையும் கற்று மறக்கச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? என்ன, மறப்பது சற்று கடினமான விஷயம், அவ்வளவே!!!

அடுத்த தெருவில், வேலு கடை (அதுவும் பொட்டிக் கடை தான்!) இருந்தது. அக்காலத்திலேயே, தற்போது டாடா, அம்பானிகளுக்கு இடையே நிலவுவது போல(!) மணிக்கும் வேலுவுக்கும் இடையே ஒரு தொழில் போட்டி (BUSINESS RIVALRY!) நிலவியது என்று கூறலாம்! வேலு கடையில் ஒரு பொருளை வாங்கச் சென்றால், மணி தன் கடையில் அப்பொருளை என்ன விலைக்கு விற்கிறார் என்று வேலு கேட்டு தெரிந்து கொள்வார். "அதை விட 5 பைசா கம்மி விலையில் நான் தருகிறேன். உன் நண்பர்களிடமும் சொல்லு!" என்பார். நான் வேலைக்குச் சேர்ந்த சமயம், மணி கடையை மூடி விட்டு, எங்கோ சென்று விட்டார். வேலு, இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

திருவல்லிக்கேணியின் பல பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்புகள் தோன்றி விட்ட நிலையிலும், நான் வாழ்ந்த பழைய வீடும் அதை ஒட்டிய மூன்று வீடுகளும் இன்று வரை அப்படியே இருப்பது ஆச்சரியமான ஒரு சங்கதி தான்! ஆனால், நான் அந்த வீட்டினுள் நுழைந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகி விட்டன. நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்! ஏதோ ஒருவித தயக்கம்!

சில நாட்களுக்கு முன், என் மகளுடன் அவ்வழியாக சென்று கொண்டிருந்த என்னை, நான் வாழ்ந்த பழைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சிறுவயது தோழன் நரசிம்மன் அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் "நான் இருந்த பழைய வீட்டை என் மகளுக்கு காட்ட வேண்டும், கூட வருகிறாயா?" என்றவுடன், தற்போது அவ்வீட்டில் வசிப்பவர்களுடன் பழக்கமில்லை என்று கூறி மறுத்து விட்டான். என் மகளின் மிகுந்த கட்டாயத்தின் பேரில், வாசலில் அமர்ந்திருந்த கண் பார்வை மங்கிய பாட்டியின் விசாரணைக்கு உட்பட்டு, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து வீட்டில் நுழைந்தேன்!

பழைய மர வாசற்கதவு இரும்புக் (grill) கதவாக மாறியிருந்தது. இடதுபுற திண்ணை இன்னும் இருந்தது. ரேழிக்கு முன்னே அக்காலத்தில் காணப்பட்ட, வேலைப்பாடுகள் நிறைந்த, பிரம்மாண்ட மரக்கதவு இருந்த இடத்தில், ஒரு நோஞ்சான் கதவு முளைத்திருந்தது! மேல்தளத்தில் பதிக்கப்பட்ட சதுர கண்ணாடி வாயிலாக ஒளி பாய்ந்தும், சற்றே இருள் சூழ்ந்த, அதே பழைய நடை! அதே பழைய வாசனை, சில்லிப்பு! அடுத்தடுத்து இருந்த வலதுபுற அறைகளுக்கு (
அக்கால சமையலறைகள்) இடையே இருந்த சுவர்கள் இடிக்கப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. பழைய மாடிப்படிகளுக்குக் கீழே, Hand pump முன்பிருந்தது போலவே! ஆனால், அப்போதிருந்த ஒரு பித்தளை பாயிலரை காணவில்லை!!! வீட்டின் பின்புறம் இருந்த குளியல் மற்றும் கழிவறைகளின் கதவுகள் மட்டும் புதிதாக இருந்தன! 'பல ஆடைகள்' கண்ட துணி துவைக்கும் கல் அப்படியே இருந்தது!

அக்காலத்தில் எங்களின் சக குடித்தனவாசிகளைப் பற்றிய ஞாபகங்கள் பெருக்கெடுத்தன! குறிப்பாக, எப்போதும் மங்கலகரமாகவும், சிரித்த முகத்துடனும் காணப்பட்ட, சுமங்கலியாய் இறந்து போன ராஜமாமி, அவரது 'பஞ்ச பாண்டவ' மகன்களில் ஒருவனான 'சிவாஜி' சாரதி, எச்சில் தெறிக்க படபடவென பேசும் 'தீர்த்தவாரி' ராகவன் மாமா, அதையும் பொருட்படுத்தாமல் அவருடன் பேசத் தூண்டும் வகையில் அமைந்த அவரது மிக அழகிய மகள் 'வெடி' ரமா, பூமா டீச்சரை தவிக்க விட்டு, 12 வருடங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போன, PONDS கம்பெனியில் வேலை பார்த்து வந்த 'வெத்தலை பாக்கு' ஸ்ரீநிவாசன் மாமா, வாய் ஓயாமல் வம்படிக்கும் வாளிப்பான சுகுணா மாமி, தற்போது ராணுவத்தில் பணி புரியும் நண்பன் சம்பத் குமார், ஓய்வு ஒழிச்சலின்றி எந்நேரமும் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்த என் பாட்டி ஜானகியம்மாள், உத்தரத்திலிருந்து கயிற்றை தொங்கவிட்டு, அதில் கிரிக்கெட் பந்தை கட்டி, வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்த ஸ்ரீதர், SV சேகருடன் நாடகங்களில் நடித்த பக்கத்து விட்டு 'பொட்லம்' ராஜாமணி, பாத்திரம் கழுவி துணி துவைத்து எங்களுக்காக மாங்கு மாங்கென்று உழைத்த, இன்று வரை எங்கள் மேல் பிரியத்துடன் இருக்கும் பணிப்பெண் கன்னியம்மாள், என் திருமணத்திற்கு விலை உயர்ந்த கடிகாரத்தை பரிசாக வழங்கிய, தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கன்னியம்மாளின் தாயார் லஷ்மியாச்சி ஆகியோர் குறித்த நினைவுகள் / நிகழ்வுகள் பல தோன்றின.

என் மகளுக்கு வீட்டைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றியும் விவரித்தபடி, மாடியேறி சென்றேன். முன் போலவே, காற்று முகத்தில் அடித்து வரவேற்றது! கீழே மாற்றப்பட்டது போலவே, மாடியிலும், இரு படுக்கையறைகள், சமையலறைகளாக மாற்றப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. நான் கோலி, கில்லி, கிரிக்கெட் ஆடிய மொட்டை மாடிக்குச் செல்ல அக்காலத்தில் படிக்கட்டுக்கள் கிடையாது. பக்கத்து வீட்டு வழியாகவோ அல்லது ஜன்னல் கம்பி பிடித்து, சாரத்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் சிரமப்பட்டு ஏறியோ மொட்டை மாடிக்குச் செல்வது எங்கள் வழக்கம்! தற்போது, மேலே செல்ல ஒரு இரும்பு ஏணி முளைத்திருந்தது! நான் பார்த்தவரை, பழைய வீடு பெருமளவு அப்படியே தான் இருந்தது. பழைய மனிதர்களைத் தான் காணவில்லை! வீட்டை புகைப்படங்கள் எடுக்கவும் மறந்து விட்டேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா


2 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

"நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்"

இந்த இடம் வரை நீங்கள் எழுதியது நான் ஏற்கனவே உங்கள் இப்பகுதியில் படித்தது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் உங்கள் முந்தைய 5 பகுதிகளைப் பார்க்கும் போது எனக்கு இப்போது அப்பத்திகள் தென் படவில்லை. ஒரு வேளை போன சனிக்கிழமை தங்கள் வீட்டுக்கு வந்த போது இது பற்றிப் பேசப்பட்டதோ? அப்படியும் தோன்றவில்லையே. அல்லது நீங்கள் முன்பு எழுதியதை இணையம் விழுங்கி அதை இப்போது உங்கள் நகலிலிருந்து புதுப்பித்தீர்களா? புதுப்பிக்கும்போது இற்றைப்படுத்தி (update) எழுதினீர்களா? எது எப்படியாயினும் அருமையான நினைவுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

good recollection

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails